×

புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் பயங்கர தீ: 2 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தைல மரக்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம், போஸ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சுற்றி 100 ஏக்கருக்கு மேல் தமிழ்நாடு அரசின் வனத்தோட்ட கழகத்திற்கு சொந்தமான தைல மரக்காடுகள் உள்ளது. இந்த தைலமரக்காட்டில் கோடை காலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதும், அந்த தீயை தீயணைப்பு துறை வீரர்களும், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் இணைந்து அணைப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 34ம் வீதி பின்புறத்தில் உள்ள தைலமரக்காட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோடை காலம் என்பதால் மரத்தின் இலைகள் உதிர்ந்து சருகுகளாக தரைப்பகுதியில் இருந்த நிலையில் தீ மளமளவென எரிய துவங்கியது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள், புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்க தொடங்கினர். தீயணைப்பு மாவட்ட அலுவலர் பானுபிரியா மேற்பார்வையில் நிலைய அலுவலர் புருசோத்தமன் தலைமையில் 20 வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதிகளுக்குள் பெரியரக தீயணைப்பு வாகனங்கள் செல்ல உரிய பாதை வசதி இல்லாததால் தீயணைப்புத்துறை வீரர்கள் மர கிளைகளை உடைத்து தீயை அணைத்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்களுக்கு உதவியாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பரவி குடியிருப்பு பகுதிக்கு பரவியதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். இந்த தீவிபத்தால் காமராஜபுரம் சுற்றுவட்டார பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் தீயணைப்புத்துறை வீரர்கள் மாலை 5 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.

Tags : Palaila Marakkat ,Pudukkottu , Terrible fire in a palm grove in Pudukottai: Soldiers extinguished it after 2 hours of fighting
× RELATED மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை