×

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளியில் 6 மாத காலத்திற்கு கூடுதல் விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளியில், கூடுதல் விலைக்கு கொப்பரை தேங்காய் 6 மாதத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தேங்காய் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், அரசம்பட்டி, பாரூர், மருதேரி மற்றும் போச்சம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டும் சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வரை தென்னையில், ஈரியோபைட் நோய் தாக்குதல் இருந்ததாலும், கடும் வறட்சியாலும் தேங்காய் விளைச்சல் பாதிப்படைந்தது. அப்போது தேங்காய் சிறுத்து காணப்பட்டதால், வெளி மார்க்கெட்டில் விலை குறைந்தது. போக்குவரத்து செலவு, உரிப்பு கூலி அதிகரித்த நிலையில், வியாபாரிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வந்தது. இதையடுத்து விவசாயிகளும், வியாபாரிகளும் தேங்காய்களை உடைத்து, காய வைத்து கொப்பரையாக வியாபாரம் செய்து வந்தனர்.

அந்த கொப்பரை தேங்காயை மாவட்டத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலையை சேர்ந்தவர்களும், ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் இருந்து வரும் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. மேலும் ஒரு குறிப்பிட்ட எண்ணெய் கம்பெனி மட்டும், தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கொப்பரையை கொள்முதல் செய்து வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பெய்த கனமழையால் தென்னை மரங்கள் உயிர்பெற்று, தற்போது தேங்காய் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேங்காயை அப்படியே விற்பனை செய்வதை விட, கொப்பரையாக விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு கொப்பரை கொள்முதல் நிலையத்தை துவக்கி, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்திட வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருட்களை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 200 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கொப்பரை விலை 1 கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.108.60க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.117.50க்கும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையிலான 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரை விளை பொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Krishnagiri ,Pochampalli , Purchase of copra coconut at extra cost for 6 months in Krishnagiri, Bochampalli: Collector instructs farmers to use
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி