ஆத்தூரில் நெல் கொள்முதல் பணி விறுவிறு: விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: ஆத்தூர் பகுதியில் அறுவடை செய்த நெல் தேக்கமின்றி கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னாளபட்டியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியிலுள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் ராஜவாய்க்கால் நீர் பாசனம் மூலம் ஆத்தூர், செம்பட்டி, அக்கரைப்பட்டி, வண்ணம்பட்டி, பாறைப்பட்டி, மல்லையாபுரம், கோடாங்கிபட்டி, பழைய செம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சம்பா, தாளடி பருவத்தில் இந்த ஆண்டு இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வழக்கத்தைவிட கூடுதலாக அதிகளவில் நெல் நடவு செய்தனர்.

கோ-51, என்எல்ஆர் மற்றும் நீண்டகால பயிரானாலும் அதிக மகசூல் தரக்கூடிய அக்சயா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். நெற்பயிர்கள் நன்கு விளைந்து வந்த நிலையில், தற்போது கடும் வெயிலால் காய்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 500 மூட்டைகள் முதல் 600 மூட்டைகள் வரும் நிலையில், தற்போது 200 மூட்டைகள் கூடுதலாக வருகிறது.

ஆனாலும் விவசாயிகளிடையே நெல் மூட்டைகள் தேங்காமல் இருக்க, அதிகாரிகள் காலை முதல் இரவு வரை முழுமையாக நெல் கொள்முதல் செய்யும் பணியை இடைவிடாது விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். விளைந்த நெல் மணிகளை வரும் கோடை மழைக்கு முன்பாகவே தேக்கமின்றி உடனடியாக அதிகாரிகள் கொள்முதல் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: