×

சென்னை ஜார்ஜ் டவுனில் லிப்டில் சிக்கி புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு: பாத்திரக்கடை உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

சென்னை: சென்னை ஜார்ஜ் டவுனில் லிப்டில் சிக்கி புலம்பெயர் தொழிலாளி இறந்த சம்பவத்தில் பாத்திரக்கடை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் மின்ட் சாலையில் சீத்தல் எண்டர்பிரைஸ் என்ற பெயரில் பாத்திரங்கள் மொத்த விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் முதல் இரண்டு தளங்களில் விற்பனை கூடமும், 4வது தளத்தில் பொருள் சேமித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. மேலும் இக்கடையில் பொருட்களை எடுத்து செல்ல திறந்த வெளி லிப்ட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கீமாராம் (வயது 24) என்பவர் பணி செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிறுவனத்தில் உள்ள சுமை தூக்கும் லிப்டில் ஏறி 4-வது மாடியில் இருந்து இறங்கினார். அப்போது கீமாராம் 2-வது தளத்திலிருந்து எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமான  சுமை தூக்கும் லிப்டில் இடையே தலை சிக்கி உயிரிழந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள் உடனே பூக்கடை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்பிளனேடு தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து உடனடியாக வெல்டிங் செய்து லிப்டில் சிக்கி உயிரிழந்த கீமாராமின் உடலை மீட்டனர். இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சீத்தல் எண்டர்பிரைசஸ் பாத்திரக்கடை உரிமையாளர் மீது பூக்கடை காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : George Town, Chennai , Migrant worker, casualty, owner, case in lift, George Town, Chennai
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்