×

வெயில் அதிகமாக இருக்கும் மதியம் 12 -3 மணி வரை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் : தமிழக சுகாதாரத்துறை

சென்னை : தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. இதே போல் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சூழலியல் மாற்றத்திற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவில் செயல்திட்டம் வகுக்குமாறு சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பநிலையை எதிர்கொள்ள நெறிமுறைகள் வெளியீடு

*வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

*உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

*வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் குடை, முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் .

*தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

*குழந்தைகள், வயதானோர், பெண்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

*வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும் நபர்களை கண்காணித்து கணக்கிடவும் குறிப்பாக அதீத வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தினசரி பதிவேற்றம் செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

*தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைந்து வெயில் காலத்தில் மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Tags : Tamil Nadu Health Department , வெயில்,மக்கள் ,தமிழக சுகாதாரத்துறை
× RELATED தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம்...