×

ஆர்டிபிசிஆர் பரிசோதனை, 7 நாட்கள் தனிமை : இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை : தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஃப்ளூ காய்ச்சல் பரவல் தொடர்பாக மாநில பொது சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் 3 பிரிவுகளாக பிரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதில் ஏ பிரிவினர் லேசான காய்ச்சலுடன் கூடிய இருமல், பி பிரிவினர் தீவிர காய்ச்சலுடன் கூடிய இருமல், சி பிரிவில் தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உள்ளோர் சேர்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யலாம் எனவும் மற்ற நேரங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனை தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் 7 நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், ஃப்ளூ காய்ச்சல் பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.


Tags : RTPCR, test, influenza, flu
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...