விழுப்புரத்தில் திருடுபோன பைக் ராயபுரத்தில் மீட்பு: உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

தண்டையார்பேட்டை: ராயபுரம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவா மற்றும் போலீசார் கடந்த 10ம் தேதி ராயபுரம் எம்.எஸ். கோயில் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு பைக்கை மடக்கியபோது, அதை ஓட்டிவந்த 2 பேர், பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக போக்குவரத்து போலீசார் பைக்கை மீட்டு அதன் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்தனர். அதில், அந்த பைக் பாண்டிச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த டாக்டர் அலுமேலு ரிஷிதர் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசியபோது, கடந்த 8ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தனது பைக் திருடு போனது என்றும், இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அலமேலு ரிஷிதர் தெரிவித்தார். இதனையடுத்து அவரை நேற்று முன்தினம் சென்னை வரவழைத்து, பைக்கை அவரிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்து போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் போலீசாருக்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்போது வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: