×

சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் திருநங்கைகள் வாழ்வாதாரம், திறன் மேம்பாடு கலந்தாய்வு

சென்னை: சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன்,   திருநங்கைகள் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில், அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சென்னை காவல் துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று மாலை காவல் ஆணையர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் சென்னை கூடுதல் ஆணையர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தோழி, சினேகிதி, சகோதரன், நிறங்கள் போன்ற திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் திருநங்கைகள் என சுமார் 65 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.


இக்கலந்தாய்வில், சென்னையில் வசிக்கும் திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நல்வழிபடுத்தி, நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் திகழ திருநங்கைகளுக்கான வாழ்வாதாரம், மாற்றுதொழிலுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வரும் திருநங்கைகளுக்கு அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  திருநங்கைகள் கல்வியிலும், அனைத்து துறையிலும் சிறந்து விளங்க காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும், திருநங்கைகளின் பிரதிநிதிகள் இணைந்து செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதா, கூடுதல் துணை ஆணையர் அண்ணாதுரை மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




Tags : Chennai Police Commissioner , On the order of the Commissioner of Police, Chennai, Transgender Livelihood, Skill Development Consultation
× RELATED போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.39 லட்சம்...