அரியலூரில் அனிதா நினைவு அரங்கம் திறப்பு நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அரியலூர்: ‘நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும்’ என்று அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மருத்துவமனையை திறந்து வைத்ததுடன் ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் 2,539 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தில் நான் நீட் தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அது என்ன என்று ஒவ்வொரு மேடையிலும் விமர்சித்து வருகிறார். நான் தேர்தல் பிரசாரத்தில் கூறியது போலவே, சட்டமன்றத்தில் நான் பேசிய முதல் கன்னிப்பேச்சில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்.

இன்று (நேற்று) அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. அனிதா நினைவு அரங்கம் என்று இது அழைக்கப்படுகிறது. இதை பார்க்கும் பொழுதெல்லாம் நீட் தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும். அண்மையில் பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை நீட் தேர்வு ரத்து பற்றிதான். அதற்கு பிரதமர் மோடி, நீட் தேர்வு தேவை என்பதற்கான அவசியங்களை எடுத்துக்கூறினார். ஆனால் நான் தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை ஏற்கவில்லை, திமுக நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்ட போராட்டத்தினை தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். திமுக சார்பில் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும் என்பதுதான் எனது நீட் தேர்வின் ரகசியம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 5 பேர் வீதம் 20 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வு பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட அனிதா பெயரில் கலையரங்கத்தை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து குன்னத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில்  போட்டி தேர்வுக்கான நூலகத்தையும்,  குன்னத்தில் பேருந்து நிழற்குடையையும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சிவசங்கர், மகேஷ் பொய்யாமொழி, சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: