×

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ரூ.2.30 கோடி சாலை பணியை தலைமை செயலாளர் ஆய்வு: போக்குவரத்திற்கு இடையூறின்றி அமைக்க அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று முன்தினம் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள்,  நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு  திட்டத்தின் கீழ்  ரூ.39.39  கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி  மதிப்பீட்டில்  204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடி மதிப்பீட்டில் 221.88 கிலோ மீட்டர் நீளத்தில் 1,408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கண்காணிக்க ஆணையர் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, நேற்று முந்தினம் இரவு 10.30 மணியளவில் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வள்ளுவர்கோட்டம் பிரதான சாலையில் ரூ.109.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடம் சாலையில் ரூ.121.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


புதிதாக போடப்படும் சாலை, அதன்மேல் உருளை இயந்திரத்தினால் இறுக்கம் ஏற்படுத்துவதையும், சாலை அளவினையும், தார்க்கலவையின் தரத்தினையும், சாலையின் நடுவிலிருந்து ஓரத்திற்கான சாய்வு அளவினையும் ஆய்வு செய்து, சாலைகளை உரிய அளவுகளின்படியும், சரியான தரத்திலும் அமைப்பதை உறுதி செய்திடவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் சமீரன், துணை ஆணையாளர்கள் ஷேக் அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன், அமித், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், பேருந்து சாலைகள் மேற்பார்வைப் பொறியாளர் சரவணபவானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags : Chief Secretary ,Chennai Corporation , Chief Secretary inspects Rs 2.30 crore road work in Chennai Corporation: Instructions to set up without disruption to traffic
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...