×

விமானங்கள் இயக்க இடையூறாக உள்ள வீடுகளின் உயரத்தை குறைக்க வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தல்

பல்லாவரம்: சென்னை விமான நிலையத்தின் அருகில், விமானங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும், உயரமான வீடுகளின் கட்டிடத்தின் உயரத்தை 2 மீட்டர் அளவு குறைக்க வேண்டும், என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருசில குடியிருப்புகளையொட்டி சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. இந்த சுற்றுச்சுவரின் அருகிலேயே சென்னை விமான நிலையத்தின் விமான ஓடுதளமும் உள்ளது. இந்த ஓடுதளம் மூலமாகத்தான், தினமும் ஏராளமான விமானங்கள் வானத்தில் பறக்கின்றன. இந்நிலையில், இந்த ஓடுதளத்தை உபயோகப்படுத்தும் விமானங்கள் மேலே பறப்பதற்கும், கீழே இறங்குவதற்கும் அதன் அருகில் இருக்கும் வீடுகளின் உயரங்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக விமானிகள் புகார் கூறி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் அருகேயுள்ள 91 வீடுகளின் உயரங்களை குறைக்க சென்னை விமானத்துறை அதிகாரிகள், ஏற்கனவே வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் கொளப்பாக்கம் ஊராட்சி மன்றம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, விமானத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வருவாய் துறை  அதிகாரிகள், சென்னை விமானத்துறை அதிகாரிகள் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட   குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: சென்னை விமான நிலையத்தின் அருகே விமானங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும் உயரமான குடியிருப்பு வீடுகளின் மேல்தளத்தினை 2 மீட்டர் உயரத்தை குறைக்கும் வகையில், வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 41 வீடுகள் 2 மீட்டர் உயரம் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், உயரமான அளவில் உள்ள வீடுகளின் தளத்தை இடிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த வீடுகளின் தளத்தை இடிக்காமல் விட்டுவிட்டு, 2 மீட்டர் குறைக்கும் அளவில் உள்ள தண்ணீர் தொட்டி, உயர்கோபுர மின்கம்பங்கள், மரங்கள் அல்லது வேறு ஏதாவது இருந்தால், அதனை மட்டும் அகற்ற வேண்டும்.

விமான நிலையத்தை பெரியதாக அமைக்க வேண்டும் என்றுதான், பரந்தூருக்கு விமான நிலையத்தை அனுப்பி வைத்தோம். அதனால், இன்று முதல் கட்டமாக 2 மீட்டர் உயரம் குறைக்கும் வீடுகளை அளவீடு செய்யும் பணி தொடங்க வேண்டும் என விமானத்துறை விமானத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நான் உங்களுக்காக உதவி செய்திடதான் நாங்கள் இருக்கிறோம். வீடுகளை எல்லாம் இடிக்க நாங்கள் விட மாட்டோம் என்று வீட்டின் உரிமையாளர்களிடம், அமைச்சர் கூறினார். அப்போது, விமான நிலைய விரிவாக்க பணிக்காக வீடுகள், நிலத்தை கையகப்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags : Minister , Height of houses obstructing flights should be reduced: Minister instructs in consultative meeting
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...