விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை நியமிக்காததால் கல்லூரியின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டது: அண்ணா பல்கலை விளக்கம்

சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை நியமிக்காத கல்லூரியின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்படவில்லை என அண்ணா பல்கலை கழகம் விளக்கம் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஜினியரிங் 3, 5 மற்றும் 7வது செமஸ்டர்களுக்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.  தேர்வு முடிவில், சில கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் தேர்வு முடிவு வெளியாகாததால், அந்த மாணவ மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, சம்பந்தப்பட்ட கல்லூரி தரப்பில் விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாதது, விடைத்தாள் திருத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகளை முறையாக ஒப்படைக்காதது, தேர்வு கட்டணத்தை சரியான முறையில் செலுத்தாதது போன்ற காரணங்களுக்காக அந்த கல்லூரி மாணவ மாணவிகளின் செமஸ்டர் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு உயர் அதிகாரிகள் கூறியதாவது:- விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக சில கல்லூரிகள், தங்கள் ஆசிரியர்களை நியமனம் செய்வது இல்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஆவதோடு, மாணவ மாணவிகளும் பாதிக்கப்படைகிறார்கள். ஆகவே அனைத்து கல்லூரிகளும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்துவதற்காக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தான் தற்போது தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 16 கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விரைந்து தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், மாணவ மாணவிகளின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, வேறு காரணம் எதுவும் இல்லை.  எங்களுக்கு கணக்கு தணிக்கையில் பிரச்சினை வருகிறது. அதை அந்த கல்லூரி விரைந்து வழங்கவேண்டும் என்பதற்காக சுமார் 15 கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பேற்று உரிய விளக்கம் கொடுத்ததும், தேர்வு முடிவு வெளியிடப்பட்டுவிடும்.

Related Stories: