திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி: மனைவி குடும்பம் நடத்த வராததால் விரக்தி

திருக்கழுக்குன்றம்: மனைவி  குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த கணவன், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்தவர் செல்வம் (30). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த வாணி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். செல்வம், அடிக்கடி குடித்துவிட்டு மனைவி வாணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த வாணி, கடந்த பல மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் புதுப்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அன்று முதல் மிகுந்த மனக்கவலையில் இருந்தார் செல்வம். இந்நிலையில், வாணியை, குடும்பம் நடத்த வரும்படி பலமுறை அழைத்துள்ளார். அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செல்வம் குடிபோதையில் நேற்று அதிகாலை வாணி வசிக்கின்ற புதுப்பட்டினம் பகுதிக்கு சென்றார்.

அங்குள்ள ஒரு செல்போன் டவரின் விறுவிறுவென ஏறினார். டவரின் உச்சிக்கு சென்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வத்தை கீழே இறங்கும்படி கூறினர். பல மணி நேரம் போராடியும் கீழே இறங்கவில்லை. அவரது மாமியார் புஷ்பா சம்பவ இடத்துக்கு  வந்தார். ‘உங்களுடன் சேர்ந்து வாழ வாணியை அனுப்பிவைக்கிறேன், கீழே இறங்கி வாருங்கள்’ என்று அன்புடன் அழைத்தார். இதையடுத்து அவர் கீழே இறங்கினார். இதையடுத்து அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: