×

போலீஸ் அனுமதியின்றி கட்அவுட், ஆர்ப்பாட்டம் அதிமுக மாஜி அமைச்சர்கள் பி.வி.ரமணா, மூர்த்தி, மாஜி எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

சென்னை: போலீசாரின் முன்அனுமதியின்றி பேனர் வைத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அதிமுகவை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில், ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமை வகித்தார். இந்த பொதுக்கூட்ட மேடை அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவ எல்இடி கட்-அவுட் வைத்திருந்தனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் கட் அவுட்டுகளை வைக்கக்கூடாது என்று திருவள்ளூர் போலீஸ் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா கூறினார். அப்போது அவரிடம், ‘அனுமதி பெற்று தான் கட்ட அவுட்டுகள் வைக்கப்படுகிறது’ என்று முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கூறினார். இதனிடையே போலீஸ் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவை மீறி, கட்-அவுட் வைத்ததாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் நகர செயலாளர் ஜி.கந்தசாமி மற்றும் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் செந்தில் ஆகிய 3 பேர் மீது திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அமமுக நிர்வாகி கொடுத்த புகாரின்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் எதிரொலியாக, சென்னை மாதவரம் மண்டலம் அலுவலகம் எதிரே, முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, திருவொற்றியூரில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் ஆகியோரின் தலைமையில் அதிமுகவினர் தேரடி சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உள்பட 150 பேர் மீது மாதவரம் காவல் நிலையத்திலும் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் மற்றும் 5 பெண்கள் உட்பட 70 பேர் மீது திருவொற்றியூர் காவல்நிலையத்திலும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags : AIADMK ,PV Ramana ,Murthy ,MLA , Cutout, demonstration without police permission ADMK ex-ministers PV Ramana, Murthy, ex-MLA case registered
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்