எடப்பாடி பழனிசாமி தரம் அவ்வளவு தான்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: ‘அநாகரீகமாகவே பேசுவதால் எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவு தான்’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை நேற்று தொடங்கி வைத்து, 30 பேருக்கு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஹெச்3என்1 வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றாலே போதும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் எடுத்துள்ளது. அதனை பின்பற்றினால் போதும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், ‘எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வரை தொடர்ந்து அநாகரீகமாகவே பேசி வருகிறார்.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தால் போராட்டம் நடத்துகிறாரே’ என கேட்டபோது, ‘எடப்பாடி பழனிசாமிக்கு எப்போதும் அப்படித்தான் பேசத்தெரிகிறது. அதனால் அவர் அப்படி பேசுகிறார். முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டார்கள். எங்கள் மீதும் வழக்கு தான் போட்டார்கள். நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் தான் எதிர்கொண்டோம். அவருக்கு (இபிஎஸ்) பேசத் தெரிந்தது அவ்வளவு தான். அவரது தரம் அவ்வளவு தான்’ என்றார்.

Related Stories: