இம்ரான்கானை கைது செய்ய வந்த போலீசாரை தொண்டர்கள் தடுத்ததால் வன்முறை

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான் கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சி தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் கலவரம் ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தோஷகானா, பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குகளில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட பின்னர், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் அவரை நாளை வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தோஷகானா வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு இம்ரான் ஆஜராகாததால், அவரை 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் பாதுகாப்பு கவச வாகனங்களுடன் லாகூரில் ஜமன் பூங்கா பகுதியில் உள்ள இம்ரான்கானின்  வீட்டுக்கு சென்றனர். அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, கட்சி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் தொண்டர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். இதில் பல போலீசார், தொண்டர்கள் காயமடைந்தனர்.

Related Stories: