சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

புழல்: சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு, கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் சென்று வருவதற்கு, முக்கிய சாலையாக சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நாள்தோறும் இந்த சாலையில் பல்லாயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளான பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு  படிக்க வரும் மாணவர்கள், அலுவலகம், தொழில், வணிக ரீதியாக செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கனரக லாரி ஒன்று சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் மேம்பாலம் மீது திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால் சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பழுதடைந்த லாரியை மேம்பாலத்திலிருந்து சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால்,  சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில்  நீடித்த போக்குவரத்து நெரிசல் மெல்ல சீரடைந்தது.

Related Stories: