கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடி அரை சதம் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிப்பு

மும்பை: குஜராத் ஜயன்ட்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டியில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக ரன் குவித்தது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜயன்ட்ஸ் கேப்டன் ஸ்நேஹ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். யஸ்டிகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் இருவரும் மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சை தொடங்கினர். ஹேலி டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அடுத்து யஸ்டிகாவுடன் ஸைவர் பிரன்ட் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது.

ஸைவர் 36 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), யஸ்டிகா 44 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஹர்மன்பிரீத் - அமெலியா கெர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. அமெலியா 19 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த இஸ்ஸி வோங் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, ஹுமைரா காஸி 2 ரன்னில் நடையை கட்டினார்.  ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத் 51 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கார்ட்னர் பந்துவீச்சில் தியோல் வசம் பிடிபட்டார். அமன்ஜோத் கவுர் கோல்டன் டக் அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. தாரா குஜ்ஜார், ஜின்டிமணி கலிதா தலா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ஆஷ்லி கார்ட்னர் 4 ஓவரில் 34 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். கிம் கார்த், ஸ்நேஹ் ராணா, தனுஜா கன்வார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

Related Stories: