சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவன் தற்கொலை: தொடரும் சம்பவங்களால் மாணவர்களிடையே அதிர்ச்சி

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 3ம் ஆண்டு பி.டெக் மாணவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐஐடியில் தற்கொலைகள் தொடர்வதால் மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனமாக கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி இயங்கி வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் (24), என்பவர் இங்கு பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள அலக்நந்தா மாணவர் விடுதியில் 273சி அறையில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர். ஆனால் புஷ்பக் மட்டும் வகுப்பறைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த உடன் படிக்கும் சக மாணவர்கள் புஷ்பக் தங்கியுள்ள விடுதி அறைக்கு சென்றனர். அங்கு கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. வெகு நேரம் கதவை தட்டியும், செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள் உடனே ஐஐடி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்படி ஐஐடியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மாணவன் புஷ்பக் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பிறகு ஐஐடி நிர்வாகம் சார்பில் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், மாணவன் புஷ்பக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவன் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவன் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் சார்பில் ஆந்திராவில் உள்ள மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமா என சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமானவகையில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களால், உடன் படித்து வரும் மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடியில் கடந்த 7 ஆண்டுகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: