×

சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இறுதி அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

சென்னை: சென்னையில் வெள்ள அபாயத்தை குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் நியமிக்கப்பட்டார். அந்த குழுவினர் சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், சென்னை பெருநகர வெள்ள அபாயத்தை குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கையை ஆலோசனை குழு திருப்புகழ் சமர்ப்பித்து, அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை சமாளிக்க, அரசு முழு வேகத்தில் செயல்பட்டது. அதன்பிறகு, உடனே பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நானும், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்து பணிகளை 80 சதவீதம் முடித்ததால், அரசுக்கு கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.  

அந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் கமிட்டியின் செயல்பாடுகள். இதற்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உழைத்திட்ட திருப்புகழ், குழுவின் உறுப்பினர்கள் ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர வெள்ள அபாயத்தை குறைத்தல் மற்றும் மேலாண்மை ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜயந்த், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin. , Final report on measures to be taken to prevent rainwater stagnation in Chennai metropolitan areas: Presented to Chief Minister M.K.Stalin
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்