×

அரியலூர் மருத்துவக்கல்லூரியில் ரூ.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்திற்கு அனிதா பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரியலூர் மருத்துவக் கல்லூரியில் 22 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என்று பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா 12ம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், ஒன்றிய அரசு, மருத்துவ சேர்க்கையினை 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால் மனமுடைந்தார்.

ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த  நீட் தேர்வு பயிற்சிகளை  பெறுவது சாத்தியமில்லை என்பாதால் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், கோர்ட் தீர்ப்பு வெளியான 9 நா்ளில் அனிதா தனது இன்னுயிரை 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது. திமுக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்  குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு செயலாளர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியது.

ஆளுநரால் அம்மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக திறக்கப்பட்டு உள்ளது. இவ்வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும்.


Tags : Anita ,Ariyalur Medical College ,Chief Minister ,M.K.Stal , Anita name for new stadium constructed at Ariyalur Medical College at a cost of Rs 22 crore: Chief Minister M.K.Stal's announcement
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்