×

தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை இனி 100 சதவீத மாணவர்கள் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் தமிழ் மொழி தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்தது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. தமிழ் மொழி நம் தாய் மொழியாக இருக்கும் நிலையில், தமிழ் மொழி தேர்வை எழுத இத்தனை ஆயிரம் மாணவர்கள் வராதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. தமிழ்நாடா- தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ் மொழி தேர்வை மாணவர்கள் எழுதாதது குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Vijayakanth ,Tamil Nadu government , Vijayakanth's request to the Tamil Nadu government is to make 100 percent students participate in the examination
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...