×

ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கத்தில் நீர் நிறைந்து காணப்படும் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை  சிட்ரபாக்கம் தடுப்பணையில் நீர் நிறைந்து காணப்படுவதால், இந்த ஆண்டு தண்ணிர் பஞ்சம் ஏற்படாது என விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் மழைநீர் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டு நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி  பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் ஊத்துக்கோட்டை அதை சுற்றியுள்ள பகுதிகளான  சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் வைத்துள்ளனர். இவர்களின் நீர் ஆதாரத்திற்காகவும் சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்தனர். அதன்படி  கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி  ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால்  அப்பகுதி விவசாயிகளும் பயனடைந்தனர்.  நாளடைவில் இந்த தடுப்பணை  மழையால் சேதமடைந்தது. இதை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் கடந்த 2014 - 2015ம் ஆண்டு ரூ.3.42 கோடி செலவில் சிட்ரபாக்கம் பகுதியில்  தடுப்பணையையும், கரைகளையும் பொதுப்பனித்துறையினர் புதுப்பித்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த மழையால், பிச்சாட்டூர் ஏரி திறக்கப்பட்டதாலும்,  ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையாலும்,  ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழை தண்ணீர், சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு  வந்து பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது.
இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஊத்துக்கோட்டை,  அனந்தேரி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என தெரிகிறது. இதனால் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்களும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Oothukottai Chitrapakkam , Barrage found full of water in Oothukottai Chitrapakkam: Farmers happy
× RELATED காஞ்சிபுரத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்: பக்தர்கள் அவதி