×

தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் சதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தகவல் தொழில்நுட்பத்திற்கு இரண்டு பக்கம் உண்டு. இளைய தலைமுறை தங்களுடைய வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில்நுடபங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில்நுட்பங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளை பரப்பி, சட்டம்-ஒழுங்கை கெடுக்கவும் இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெறும் 50வது பிரிட்ஜ் கருத்தரங்கை சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தகவல் தொழில்நுட்பத்தை அரசு நிர்வாகத்திலும், மக்கள் சேவையிலும் புகுத்தி, நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்று சேர்ந்திட வேண்டுமென்பதை நன்கு உணர்ந்த தலைவர் கலைஞர், தனது ஆட்சி காலத்தில், தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி காட்டினார்.

திமுக ஆட்சி காலத்தில் 1997ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்து கொடுத்தார் கலைஞர். கணினி என்ற பெயரை பலரும் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கை  தமிழ்நாட்டில் அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்தான் தலைவர் கலைஞர். 1997ல் தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்கிட அதற்கென ஒரு புது கொள்கையினை உருவாக்கி ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கட்டிடமாக கட்டி 2000ம் ஆண்டில் அதனை திறந்து வைத்து கலைஞர் பெருமை சேர்த்தார். தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு நிகழ்த்தி இருக்கும் இன்றைய சாதனை கலைஞரின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றிதான் என்று நான் உறுதியோடு சொல்ல முடியும். மற்ற மாநிலங்களைவிட தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாடு முன்னேறி இருப்பதற்கு காரணம் கலைஞர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

இதே வழித்தடத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசும் இப்போது செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப முதலீட்டுக்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூக கட்டமைப்புகள், மனித ஆற்றலையும் தமிழ்நாடு முழுமையாக கொண்டுள்ளது. இதை நன்கு பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப தொழிலை வளர்ச்சி அடைய செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன் சென்று சேர்ந்திடவும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப துறையில் முதல் மாநிலமாக உருவாக்கிடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கலைஞர் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கிற திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

இத்துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் இதன் வளர்ச்சிக்காக தினமும் உழைத்துக்  கொண்டிருக்கிறார். புதிய புதிய முயற்சிகளை துணிச்சலாக எடுக்கும் ஆற்றல்  படைத்தவராக அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். மருத்துவம், கல்வி, வேளாண்மை  மற்றும் அரசு துறைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக மாற்றும் நடவடிக்கையில் அவர் இறங்கி இருக்கிறார். இத்தகைய தொலைநோக்கு பார்வைகொண்ட அமைச்சர்  தங்கராஜுக்கும், இந்த துறையினுடைய அதிகாரிகளுக்கும் எனது பாராட்டு,  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த  தேசிய மின்ஆளுமை திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின்ஆளுமை  திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைபடுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு  முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில் அதன் வளர்ச்சியை  தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு  உறுதிபூண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பொருளாதார வளம், அதிகரித்த  வேலைவாய்ப்பு என இரட்டை பலன்களை அடைய முடியும். ஐடி உட்கட்டமைப்பு சேவைகளை வழங்குவதில் மற்றும் மாநில குடும்ப தரவு தளம் பிளாக் செயின் மற்றும்  இ-அலுவலகம் மூலம் ஸ்மார்ட் அலுவலகத்தை நிறுவுவதன் மூலமாக சேவைகளை மேம்படுத்திட இயலும் என்பதால் தமிழ்நாடு அரசு அதில் தனி கவனம் செலுத்தி  வருகிறது. இதன்மூலம் குடிமக்கள் விரைவில் காகிதம் இல்லா வெளிப்படைத்தன்மையுடைய சேவைகளை பெற இயலும். தரவுகள் எனப்படும் டேட்டாதான்  இந்த காலத்தின் புதிய எரிபொருள். தமிழ்நாடு டேட்டா சென்டர் பாலிசியை வெளியிட்டதின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் டேட்டா சென்டர் உட்கட்டமைப்புகளை உருவாக்க உதவும் முதல் நோக்கம் பூர்த்தி  செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்திட தகவல் தொழில்நுட்ப துறை, கல்வி துறை மற்றும் நாஸ்காம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை கொண்டு ‘எதிர்காலத்திற்கான ஆலோசனை குழுவை’ மாநில அரசு அமைத்துள்ளது. தமிழ்நாட்டின் துடிப்பான தகவல் தொழில்நுட்ப  கட்டமைப்பை உருவாக்கிட திறன் இடைவெளியை குறைப்பது என்பது மிகவும்  முக்கியமானது. அதனை உணர்ந்துதான் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகள் மூலமாக அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் ஐபிஎம் ஆகியவற்றின் மூலமாக 50 ஆயிரம் ஐடி கணிணி துறை மாணவர்களுக்கு 3 கிரெடிட் கட்டாய கற்றல் வகுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பயிற்சியை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் தொழில்நுட்பத்திற்கு 2 பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்த அளவுக்கு எந்த நோக்கத்திற்கு பயன்படுத்துவதை பொருத்தே அதன் பயன்கள் இருக்கும். இளைய தலைமுறை தங்களுடைய வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில்நுடபங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில்நுட்பங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளை பரப்பி, சட்டம்-ஒழுங்கு கெடுக்கவும் இதனை சில  அரசியல் கட்சியினர் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைதளங்களும் பெருகி வருகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பழிவாங்கிக்  கொண்டிருக்கிறது. எனவே வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து துறை வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் கொள்கைக்கு இந்த கருத்தரங்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன். தகவல் தொழில்நுட்ப துறை வளர வேண்டும். அது இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட முன்னேறிய துறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், மேயர் பிரியா, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் சீத்தாராம், மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்பங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் குற்ற சம்பவங்கள் அதிகம்  நடக்கின்றன. வதந்திகளை பரப்பி, சட்டம்-ஒழுங்கு கெடுக்கவும் இதனை சில அரசியல் கட்சியினர் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைதளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தரவுகள் எனப்படும் டேட்டாதான் இந்த காலத்தின் புதிய எரிபொருள். டேட்டா சென்டர் பாலிசியை வெளியிட்டதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள  நிறுவனங்கள் டேட்டா சென்டர் உள்கட்டமைப்புகளை உருவாக்க முடியும்.

Tags : CM ,G.K. Stalin , Some political forces are conspiring to destroy law and order by misusing information technology: Chief Minister M. K. Stalin alleges
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...