×

தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகம் சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது: 4 நாட்களில் ரூ.1880 உயர்ந்தது; தொடர் விலையேற்றத்தால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1880 உயர்ந்ததால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சில வாரம் திடீரென்று உயர்வதும், அதன் பிறகு விலை குறைவதுமாகவும் இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது. 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால் அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. திங்கட்கிழமை மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,325க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ1,880 அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்படியே தங்கம் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டே சென்றால் வரும் நாட்களில் தங்கம் விலை பவுன் ரூ.44 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சம் நகை வாங்குவோரிடையே நிலவி வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதுமே தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.


Tags : Gold price again jettisoned past Rs 43k shaver: Rs 1880 up in 4 days; Jewelery buyers are shocked by the continuous price hike
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது