×

அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை: 2வது நாளாக ஆளும் கட்சி அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்க இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லண்டனில் ராகுல் தெரிவித்த கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்கக் கோரி ஆளும் பாஜ கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2வது நாளாக முடங்கின.

அமெரிக்காவின் ஹின்டன்பர்க் ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் அதானி குழுமம் பல மோசடிகளை செய்ததாக சமீபத்தில் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக, அதானி பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால், அந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். ஒன்றிய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழும பங்குகள் மீது முதலீடு செய்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைந்த நாடாளுமன்ற முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் பிரதானமாக முன்வைத்தன.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதிலும் அதானி விவகாரத்தை எழுப்பி ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதை முறியடிக்கும் விதமாக ராகுலின் லண்டன் பேச்சுக்களை கண்டித்து பாஜ எம்பிக்கள் அமளி செய்கின்றனர். சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் அமளி செய்கின்றனர். இதன் காரணமாக, 2ம் கட்ட பட்ஜெட் தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், 2வது நாளாக நேற்று மீண்டும் இரு அவைகளும் கூடியன. முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் முக்கிய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்பிக்களும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இதில் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் அதானி விவகாரத்தை அவையில் எழுப்ப திட்டமிட்டப்பட்டிருந்தது. அதற்காக, அவையை ஒத்திவைத்து, அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

மக்களவை காலையில் கூடியதும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் மற்றும் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ தமிழ் ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதற்கு அனைத்து எம்பிக்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நோட்டீஸ்கள் அனைத்து நிராகரிக்கப்பட்டன. மேலும், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பவிடாமல், மீண்டும் ராகுல் விவகாரத்தை வைத்து பாஜ எம்பிக்கள் அமளி செய்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜ எம்பிக்கள் கூச்சலிட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியும் பாஜ எம்பிக்களின் அமளி தொடர்ந்ததால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல மாநிலங்களவை காலையில் கூடியதும், ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், ராகுல் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த காங்கிரஸ் மக்களவை கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘ராகுல் மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு அவர் பெரிய தவறு எதையும் செய்யவில்லை. 2 நாளாக அவையை நடத்த விடாமல் முடக்கியிருப்பதற்காக ஒன்றிய அரசு தான் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

இந்த சூழலில், அதானி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான உத்திகளை வகுக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை எழுப்புவது தொடர்பாகவும், அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணி செல்வது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதானி மோசடிகள் குறித்து எந்த விசாரணையும் நடத்தாத ஒன்றிய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து, பல்வேறு விசாரணை நடத்தி வருகின்றன. இதன் மூலம் சிபிஐ, அமலாக்கத்துறையை ஒன்றிய பாஜ அரசு அரசியல் லாபத்திற்காக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* அதானிக்காக நடக்கும் அமளி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘பிரதமர் தொடர்புபடுத்தப்பட்ட அதானி மோசடியில் கூட்டுக்குழு விசாரணக்கான நியாயமான கோரிக்கையை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதால், இப்பிரச்னையை திசை திருப்ப பிரதமரும் அவரது சகாக்களும் திட்டமிட்டு ராகுல் விவகாரத்தில் அமளி செய்து அவையை முடக்குகின்றன’’ என டிவிட்டரில் குற்றம்சாட்டி உள்ளார். ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘‘இந்தியாவின்  வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் அதானியை பணக்காரர் ஆக்குவது தானா? கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு பயணங்களில் அதானியை கூடவே அழைத்துச் சென்றுள்ளார்’’ என விமர்சித்துள்ளார்.

* கோயலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ்
ராகுல் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி சக்திஷின் கோஹில் உரிமைமீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளார். மக்களவை உறுப்பினருக்கு எதிராக மாநிலங்களவையில் குற்றம்சாட்டக் கூடாது என்ற விதிமுறையை சுட்டிக்காட்டி அவர் நோட்டீசை தாக்கல் செய்தார்.

Tags : Adani ,Parliament , Opposition parties discuss next course of action on Adani case today: Parliament stalled for 2nd day due to ruling party impeachment
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...