ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஜம்மு - காஷ்மீருக்கு, ரூ.1.18 லட்சம் கோடியில் தனி பட்ஜெட்: மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல்

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீருக்கு ரூ.1.18 லட்சம் கோடியில் தனி பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் கடந்த பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2023-24 நிதியாண்டின் பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி இந்த பட்ஜெட்டில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘வரும் ஐந்து ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க உறுதிபூண்டுள்ளோம். ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், விவசாயத்தை ஊக்குவித்தல், முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் உள்ளிட்ட திட்டங்களின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ .1,18,500 கோடி; வளர்ச்சிக்கான செலவு ரூ .41,491 கோடி; மதிப்பிடப்பட்ட வருவாய் ரூ.1,06,061; வருவாய் செலவு ரூ .77,009 கோடியாக இருக்கும்’ என்று கூறினார்.

Related Stories: