×

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை; தோப்புக்களில் பொங்கலிட்டு வழிபாடு: திரளான பக்தர்கள் குவிந்தனர்

குளச்சல்: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த 5ம் தேதி காலை  திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) 10ம் நாள் திருவிழா ஆகும். அதையொட்டி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 6  மணிக்கு குத்தியோட்டம் ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோயிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிமுதல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8  மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம் நிறைவு, 8 மணி முதல் மாலை 9  மணிவரை பெரிய புராணம் தொடர் விளக்கவுரை நிறைவு, 9 மணிமுதல் 10.30 மணிவரை  பக்தி பஜனை, 10.30  மணிமுதல் 11.30 மணிவரை ஆன்மீக உரை, 11.30 முதல் பிற்பகல் 2  மணிவரை சிந்தனை சொல்லரங்கம், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6  மணிவரை பரிசளிப்பு விழா, இரவு 7  மணிமுதல் 8.30 மணிவரை சமய மாநாடு, 6 மணிமுதல் இரவு 10  மணிவரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

கொடை 10 ம் நாள் நிறைவு நாளான இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து அம்மனை வழிப்பட்டு வருகின்றனர். பலர் அருகில் உள்ள தென்னந்தோப்புக்களில் நண்பர்கள், குடும்பமாக பொங்கலிட்டும், சமையல் செய்தும் அம்மனை வழிப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், குமாரகோவில், தக்கலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் கேரள மாநில போக்குவரத்துக்கழகம் சார்பில் திருவனந்தபுரம் பகுதியில் இருந்தும் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன.

மண்டைக்காட்டில் இன்று பக்தர்கள் அதிகமாக குவிந்ததால் கோயில் சனன்தி, பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை சந்திப்பு ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். கடற்கரையில் பக்தர்கள் புனித கால் நனைக்கும் பகுதியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யாகுமார் தலைமையில் நீச்சல் பயிற்சி பெற்ற சிறப்பு தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை நிறைவு நாளான இன்று மிகுந்த களைக்கட்டி காணப்பட்டது.

Tags : Mandaikkadu Bhagavathyamman Temple , Masikkodai at Mandaikkadu Bhagavathyamman Temple; Pongalitu worship in the groves: Devotees thronged in large numbers
× RELATED மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்...