×

விதிமீறலில் ஈடுபட்டதாக நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதுனர். அண்ணா பல்கலைகழகம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் 3, 5, 7 செமஸ்டர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் சில கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைகழக கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாத தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள் திருத்த வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகளை ஒப்படைக்காத பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் பெறப்பட்ட தேர்வு கட்டணங்களை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்காத கல்லூரிகளின் தேர்வு முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த காரணங்களின் அடிப்படையில் சில பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Department of Higher Education , In Violation, 18 Self-Financing Colleges, Exam Result, Higher Education Department Order
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!