×

சென்னை வடபழனியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி நகை கொள்ளை: ஒருவர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் கோனிகா கலர் லேப் நிறுவன தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளையடித்த வழக்கில் சிசிடிவி பதிவுகள் மூலம் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு சென்று அழகிகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வடபழனி குமரன் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழிலதிபரான இவர், ‘கோனிகா’ என்ற பெயரில் கலர்லேப் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி சொந்த வேலை தொடர்பாக தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ்குமார் ஐதராபாத்திற்கு சென்றார். பிறகு பணி முடிந்து கடந்த 1-ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு 66 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், ரூ.13.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் 80 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தொழிலதிபர் சந்தோஷ்குமார் அளித்த புகாரின் படி விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நொளம்பூர் பகுதியில் திருட்டு வழக்கில் கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து(32) என்பவரை நொளம்பூர் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏராளமான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில் வடபழனியில் கோனிகா கலர் லேப் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ்குமார் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், தொழிலதிபர் வீட்டின் அருகே சிசிடிவியில் பதிவான காட்சிகளும் முத்து என உறுதியானது.  பிரபல கொள்ளையனான முத்து அயப்பாக்கத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து திருமண உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்து கொண்டு பல இடங்களில் வசதியான வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து திருடிய நகைகள் மற்றும் பணத்துடன் சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் நொளம்பூர் போலீசார் பிரபல கொள்ளையன் முத்துவை விருகம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி விருகம்பாக்கம் போலீசார் முத்துவிடம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவனிடம் இருந்து 30 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.62 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Vadapalani, Chennai , Rs 1.50 crore jewelery heist from businessman's house in Vadapalani, Chennai: One arrested
× RELATED வடபழனி வணிக வளாகத்தில கஞ்சா விற்ற சூபர்வைசர் கைது