×

ஓசூர் அருகே கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 3 பேர் கைது-போலீசார் சுற்றிவளைத்தனர்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில் நிலையம் பின்புறம், சந்தேகத்திற்கிடமாக சிலர் சுற்றித்திரிவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று, 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசினர். உடனே, அவர்களை சோதனை செய்தபோது, 3 பேர் இடுப்பிலும் கத்தியை மறைத்து வைத்திருந்தனர்.

தீவிர விசாரணையில், அவர்கள் மூக்கொண்டப்பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன்(24), மஞ்சு(30) மற்றும் சதீஷ்(20) என்பதும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், அவர்கள் வைத்திருந்த பையில் சோதனையிட்ட போது, கையுறை மற்றும் கைகளை கட்டும் கயிறு, கூர்மையான ஆயுதம் உள்ளிட்டவை இருந்தன. கடந்த 2021ம் ஆண்டு ஓசூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ₹30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது, கடந்த டிசம்பர் மாதம் அட்கோ காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் கதவை தட்டி, அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் -நகையை கொள்ளையடித்து தப்பித்த போது, தடுக்க முயன்ற அவரது கணவர் மற்றும் மகனை கத்தியால் குத்திவிட்டு ஓட்டம் பிடித்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து நகை மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கூறுகையில், ‘கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. உடனே, நாங்கள் சென்று குற்றவாளிகளை கைது செய்தோம். இதன்மூலம் குற்றச்சம்பவம் நடைபெறும் முன்பே தடுத்து விட்டோம். எனவே, அசம்பாவிதம் நடைபெறுவது போல் உணர்ந்தால், பொதுமக்கள்  தைரியமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,’ என்றார்.

Tags : Hosur , Hosur: Krishnagiri district, the town police received a tip-off that some suspicious people were roaming around behind the Hosur railway station.
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு