திருக்கடையூர் அருகே ராமச்சந்திரன் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

செம்பனார்கோயில் : திருக்கடையூர் அருகே ராமச்சந்திரன் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூரில் ராமச்சந்திரன் வடிகால் வாய்க்கால் திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், செட்டிமேடு, ஜெயபுரம் வழியாக செல்கிறது. இந்த வாய்க்காலை நம்பி திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், மாணிக்கப்பங்கு, சிங்கனோடை, ஆணைக்கோவில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் இந்த பாசன வாய்க்கால் அப்பகுதி நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக உள்ளது. மழை காலத்தில் மழைநீர் வடிவதற்கு வடிகாலாகவும் இருந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாசன வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் மேற்படி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை, செடி-கொடி, சீமை கருவேல மரங்களாலும் மண்டி காணப்படுகிறது. இதனால் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி ராமச்சந்திரன் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: