ஈரோடு : ஈரோட்டில் வெவ்வேறு சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சைலேந்தர் (28).பெயிண்டர். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர், ஈரோடு சி.என். கல்லூரி எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன் தினம் இரவு மது வாங்கச் சென்றுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்றுள்ளார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 4 பேர் சைலேந்திரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் பைக் சாவியால் சைலேந்தரின் காதில் குத்தி தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, அவர் வைத்திருந்த ரூ. 620-ஐ பறித்து கொண்டு, மேலும், அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து கொடுக்கச் சொல்லி மிரட்டி, அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்துக்கு இழுத்து சென்றுள்ளனர்.அங்கு, இயந்திரத்தில் ஏ,டி.எம். கார்டை சொருகி பார்த்ததில் பணம் வரவில்லை. இதையடுத்து, வேறொரு ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது சைலேந்தர் வர மறுத்ததால், 4 பேரும், ஒரு கல்லை தூக்கி சைலேந்தரின் காலில் போட்டடுள்ளனர். மேலும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க அவரது கண்ணிலும் பலமாக தாக்கியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சைலேந்தரிடம் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து, சைலேந்தர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்த மதன்குமார் ( 26), காரை வாய்க்கால் ரோடு பகுதியைச் சேர்ந்த சபரி (28), கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (31) மற்றும் செல்வராஜ் மகன் ராஜ்குமார் (27) ஆகிய 4 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர்.
இதேபோல, உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சுவலேஷ் (27) ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் அருகில் நேற்று முன் தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் சுவலேஷிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மூவரும், பணம் கொடுக்கவில்லை என்றால் கை, கால்களை முறித்து ஆற்றில் வீசி விடுவோம் என மிரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியசுவலேஷ், அதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26), அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த நசீர் (23) மற்றும் சலாம் மகன் சாகுல் அமீது (23) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நேற்று மாலை கைது செய்தனர்.
