நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றையதினம்(நேற்று) தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குமரி மாவட்டத்தில் கல்வி மாவட்டமாக மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் பிரிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்டத்தில் 45 தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 133 பள்ளிகளை சேர்ந்த 5939 மாணவர்களும், 6090 மாணவிகளும் தேர்வு எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் 37 தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 123 பள்ளிகளை சேர்ந்த 5866 மாணவர்களும், 5497 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 392 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேல்நிலை முதலாமாண்டு தேர்வானது ஏப்ரல் 5 அன்று நிறைவு பெறுகிறது. மார்த்தாண்டத்தில் 45 தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5579 மாணவர்களும், 5822 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளார்கள். நாகர்கோவிலில் 37 தேர்வு மையங்களும், 1 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4929 மாணவர்களும், 5750 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 80 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளார்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடைகிறது. மார்த்தாண்டத்தில் 66 தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 827 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளார்கள். நாகர்கோவிலில் 48 தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 497 மாணவ, மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 324 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளார்கள்.
மேல்நிலை தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் பெறப்பட்டு வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலரின் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் தேர்வு நாளன்று தனி வாகனம் மூலம் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்கள் 22 வழித்தடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் நிலையான படையினர் 100 பேரும், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கட்டுபாட்டில் இயங்கக் கூடிய பறக்கும் படை 100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வினை கண்காணிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பு அலுவலராக துணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஒருக்கிணைந்தப் பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் தேர்வு மையங்கள், வழித்தட வாகனங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுத் தேர்வுக்கு அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் சுமார் 3500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி உட்பட ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர். முதல் நாளில் 560 பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் முதல்நாளில் மொழித்தாள் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது என்று தேர்வர்கள் தெரிவித்தனர். வழக்கமாக எதிர்பார்க்கும் பாட பகுதிகளில் இருந்து ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்பெறாதது மாணவ, மாணவியரை ஏமாற்றம் அடைய செய்தது. அதே வேளையில் இதர பகுதிகள் எளிமையாக இருந்தது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். குமரியில் 16 பார்வையற்றவர்கள் குமரி மாவட்டத்தில் மொத்தம் 86 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். 16 பேர் பார்வையற்றவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் விழிப்புணர்வு சுவரொட்டி
பிளஸ் 2 பொதுத்தேர்வை நேர்மையாக நடத்தும் வகையில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வறையில் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படுவர். தேர்வறையில் துண்டுத்தாள், செல்போன் முதலியன வைத்திருத்தல், வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில்ஈடுபட்டால் மாணவர்களுக்கு ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை, தேர்வு எழுத தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைக்குள்ளாக நேரிடும். இதன் காரணமாக எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.