×

சபரிமலையில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் : ஒன்றிய அரசு

டெல்லி : சபரிமலை எரிமேலியில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சபரிமலை அருகே எரிமேலியில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி, கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்றவை கேரள மாநில அரசிடம் இருப்பதாக தெரிவித்தார்.

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க சுமார் 2,300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் விமான நிலையத்தை அமைப்பதற்காக சுமார் ரூ.4,000 கோடி செலவாகும் என்றும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வருகை தந்து சுவாமி ஐயப்பனை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர். கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்தான் தற்போது சபரிமலைக்கு வருபவர்கள் விமானங்களில் வந்திறங்க முடியும். இரு நகரங்களிலிருந்தும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வதற்கான பயண நேரம் அதிகம் தான்.இதனால், சபரிமலை அருகிலேயே விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Greenway airport ,Sabarimala ,Union Govt , Sabarimala, Greenway, Airport
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு