ஆந்திராவில் வாகன சோதனை காரில் செம்மரக்கட்டைகள் கடத்தியவர் அதிரடி கைது-திருவண்ணாமலையை சேர்ந்தவர்

திருமலை :  ஆந்திராவில் வனத்துறையினர் வாகன சோதனையில் காரில் கடத்திய செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், திருவண்ணாமலையை சேர்ந்தவரை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்ட வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடரமணாவிற்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் கிரண் தலைமையில்,  சோமலா மண்டலம் கல்லூர் அருகே உள்ள  சுண்டுப்பள்ளியில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, வனப்பகுதியில் இருந்து வேகமாக ஒரு கார் வந்தது. அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதை கண்ட அவர்கள் காரை வழியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை கண்ட அதிகாரிகள் அவர்களை விரட்டி சென்றதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி என்பது தெரியவந்தது. பின்னர், காரில் சோதனையிட்டபோது, 6 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் துரைசாமியை கைது செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: