×

66 சவரன், ரூ.13.5 லட்சம் கொள்ளை வழக்கு தொடர்பாக வீடு மாறி சென்று விசாரணை நடத்திய பெண் இன்ஸ்பெக்டருக்கு அடி உதை: நள்ளிரவில் பரபரப்பு

வளசரவாக்கம்: தொழிலதிபர் வீட்டில் 66 சவரன், ரூ.13.5 லட்சம் கொள்ளை போன வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட குழப்பத்தில், வெறு ஒருவரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வடபழனி குமரன் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழிலதிபரான இவர், ‘கோனிகா’ என்ற பெயரில் கலர்லேப் நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி சொந்த வேலை தொடர்பாக தனது மனைவி அருணா தேவியுன் சந்தோஷ்குமார் ஐதராபாத்திற்கு சென்றார். பிறகு பணி முடிந்து கடந்த 1ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 66 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் மற்றும் 80 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தொழிலதிபர் சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில், விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வசிக்கும், சந்தோஷ்குமாரின் முன்னாள் ஊழியர் சுரேஷ் என்பவரிடம் விசாரிக்க, அவரது வீட்டிற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் காவலர் இலக்கியா, காவலர்கள், ஜெகன், இளையராஜா ஆகியோர்  நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். காரில், காவலர்கள் இருந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் காவலர் இலக்கியா மட்டும் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் சுரேஷ் வீட்டிற்கு செல்வதற்கு பதில், அருகில் உள்ள பொன்னுவேல் என்பவரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். பின்னர், வீட்டிற்குள் நுழைந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, சாதாரண உடையில் வந்து இருப்பது இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல், பொன்னுவேல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பொன்னுவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவரும் வந்து வாக்குதாதத்தில் ஈடுபட்டு, பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் சென்ற காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனே, இன்ஸ்பெக்டர் சுமதி காரில் இருந்த காவலர்களை உதவி கேட்டு அழைத்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த காவலர்கள் இரண்டு பேரிடம் இருந்து பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலரை பத்திரமாக மீட்டனர்.  தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய பொன்னுவேல் மற்றும் சுகுமார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கே.ேக.நகரில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Savaran , 66 Savaran, woman inspector who went house-to-house and investigated in connection with Rs 13.5 lakh robbery case kicked: midnight riot
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...