துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.78.2 லட்சம் தங்கம் பறிமுதல்: மர்ம நபருக்கு வலை

தாம்பரம்: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும்  இறங்கி சென்றனர். அதன் பின்பு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருந்தது.

 

எனவே, விமான லோடர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருக்கை ஒன்று வழக்கத்துக்கு மாறாக உயர்ந்து இருந்தது. அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது, இருக்கைக்கு கீழே பிளாஸ்டிக் பவுச் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி லோடர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து சோதனை செய்தபோது, அதில் தங்கப்பசை இருந்தது. அதை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள், அந்த பவுச்சுக்குள் இருந்த 1.6 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.78.2 லட்சம். சுங்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தங்க பசையை மறைத்துவைத்துவிட்டு, தப்பிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு கெடுபிடி மற்றும் தீவிர சோதனை காரணமாக, தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, அதை விமானத்திலேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. எனவே, விமானத்திற்குள் உள்ள சிசிடிவி கேமரா, விமான நிலைய நிலைய வருகை பகுதி காட்சிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: