ஆவடி: வில்லிவாக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 1001 மரக்கன்றுகளை நட்டனர். திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சி. சென்னை ஒட்டி உள்ள பகுதியானதால் அயப்பாக்கம் நகரமயமாகி வருகிறது. இந்நிலையில். இன்னும் ஊராட்சியாகவே தொடர்கிறது. ஆனால் நாள்தோறும் அதிகரித்தும் கட்டுமான பணிகள் மற்றும் அதிகரிக்கும் மாசு காரணமாக தற்போது சுற்று வட்டார பகுதியில் மரங்களை காண்பது அரிதாகிவிட்டது.
இந்நிலையில் அயப்பாக்கம் பகுதியை பசுமையான ஊராட்சியாக மாற்ற ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. ஊராட்சி முழுவதும் உள்ள அனைத்து தெருக்களிலும் மரக்கன்றுகள் நடுவது என திட்டமிடப்பட்டது. அதன்படி 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக கூட்டுறவு நகர் மற்றும் கிரீன் கார்டன் பகுதியில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட தெருக்களில் 1001 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செயல் அலுவலர் துரை வீரமணி தொடங்கி வைத்தார். அயப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு கூட்டுறவு நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட தெருக்களில் வேம்பு, புங்கை, அசோக, பாதாம், கொய்யா, மாங்கணி உள்ளிட்ட 20 வகையான நாட்டு மரங்கள் நட்டனர்.
இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திருவிழாவைப்போல் ஒரே நேரத்தில் தெருக்களில் வரிசையாக நின்று மரக்கன்றுகளை நட்டனர். இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகளிர் சுயஉதவி குழுவினர் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமான பணியாக மேற்கொண்டு அயப்பாக்கம் ஊராட்சியை பசுமையான ஊராட்சியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
