பிரமாண பத்திரத்தை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை என உத்தரவு: ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி

சென்னை: நன்னடத்தை, பிரமாண பத்திரத்தை மீறும் குற்றவாளிகளுக்கு, சிறை  தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட  அரசாணைகள் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்  குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் காவல் துறையினர், எந்த  குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என்று நன்னடத்தை பிரமாண பத்திரம்   பெறுவது நடைமுறையில் உள்ளது. இந்த  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைக்க, காவல் துறை துணை ஆணையர்களுக்கு  அதிகாரம் வழங்கி, தமிழ்நாடு அரசு 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அரசாணைகள்  பிறப்பித்திருந்தது.

இதன்படி  நன்னடத்தை பிரமாணத்தை மீறியதாக சிறையிலடைக்கப்பட்டவர்கள் தரப்பில், சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இருவேறு  நீதிபதிகள் இருவேறு விதமாக தீர்ப்பளித்ததால், இதுசம்பந்தமான சட்டக்  கேள்விக்கு விடை காண நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ்  அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த  வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு, நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை  சிறையிலடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட  இரு அரசாணைகளும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை.  நீதித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் அதிகாரத்தை காவல் துறையினர்  பயன்படுத்த முடியாது. எனவே, இந்த இரு அரசாணைகளும்  அமலுக்கு வருவதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். நன்னடத்தை  பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மட்டுமே  நடவடிக்கை எடுக்க முடியும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: