×

அறநிலையத்துறை சார்பில் பேரவையில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

சென்னை: அறநிலையத்துறையின் சார்பில், சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒவ்வொரு ஆண்டும், இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் குறித்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதோடு, அவற்றை முழு வீச்சில் நிறைவேற்றிடும் வகையில், மாதந்தோறும் சீராய்வுக் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2023-2024ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட வேண்டிய, புதிய அறிவிப்புகள் குறித்து கடந்த 6ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, நேற்று நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற புதிய அறிவிப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளாக வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் குறித்தும், கடந்த 2021-2022 மற்றும் 2022-2023ம் நிதியாண்டுகளில் 277 அறிவிப்புகளின் மூலம் அறிவிக்கப்பட்ட 8,830 பணிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் மட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் இதர பணிகளின் முன்னேற்றம் குறித்தும், குறிப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் நடைபெற்று வரும் 274 பணிகளின் முன்னேற்றத்தினையும் அமைச்சர் விரிவாக கலந்தாய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Council ,Minister ,Sekar Babu , New announcements on behalf of Charities Department: Consultation meeting under the chairmanship of Minister Shekhar Babu
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...