×

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் எடப்பாடிக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை எச்சரிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்த எடப்பாடிக்கு செல்வபெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:சிவகங்கையில் நேற்று முன்தினம் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சம். மேலும்,  அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்களில் இவ்வளவு தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுபவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. ஒரு எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு அவர் பேசும் பேச்சுகளில் கவனம் வேண்டாமா. தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நிலை குலைந்து போய், அரசியல் முதிர்ச்சியின்றி எடப்பாடி பழனிசாமி இப்படிப் பேசி வருகிறார். சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள், கண்ணியமான தமிழ்நாட்டின் அரசியல் நாகரீகத்திற்கு, இழுக்கு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பேசிய தரம் குறைந்த பேச்சுக்கு, அந்த தொகுதி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து, மிக மோசமாக அவரது கட்சியினரை தோற்கடிக்க வைத்தார்கள். அதிலிருந்து அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை. இதே போன்று வரும் காலங்களில் பேசினால் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மேலும், சொந்தக் கட்சியினரே அவரை விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Congress Assembly ,Selvaperunthakai , People of Tamil Nadu will teach a lesson to anyone who criticizes Chief Minister M.K.Stalin: Congress Assembly Leader Selvaperunthakai warns
× RELATED வேலைவாய்ப்பு சிறப்புத்திறன் பயிற்சி...