×

நாடாளுமன்ற துளிகள்

*ஏகே 203 ரைபிள்ஸ் உற்பத்தி
மாநிலங்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றுக்கு  அளித்த பதிலில்,‘‘ஆயுத படைகளுக்கான ஏகே 203 ரக துப்பாக்கிகள் உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் உளள் இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் சோதனை கட்டத்தில் உள்ளது. ஏகே 203 துப்பாக்கிகளை உள்நாட்டில் உருவாக்குவது பாதுகாப்பு படைகளுக்கான தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதில் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

* பாதுகாப்பு துறை இலக்கு ரூ.1.75லட்சம் கோடி
பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில்:  2024-2025ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு துறை ஏற்றுமதி ரூ.35ஆயிரம் கோடி உட்பட மொத்தம் ரூ.1.75லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு உற்பத்தியை எட்டுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

* தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 4 பேர் குழு விசாரணை
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பிக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு  ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 9 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பல்கலை  நிர்வாகம் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும், தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பல்கலை  வளாகத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.  விசாரணை நடத்த 4 பேர் கொண்ட   குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

* 23 டிஆர்டிஓ திட்டங்கள் தாமதம்
பாதுகாப்பு துறை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய ஒன்றிய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட், ``தற்போது 55 முக்கிய திட்டப் பணிகளை ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை (டிஆர்டிஓ) மேற்கொண்டுள்ளது. இவற்றில் 23 திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்க முடியவில்லை. இதில் 9 திட்ட செலவு கூடுதலானதால் குறித்த காலக்கெடுவுக்குள் முடியவில்லை,’’ என்று தெரிவித்தார். அதே நேரம், இதற்கா காலக்கெடு மற்றும் திட்டம் அமல்படுத்தப்படும் காலம் குறித்து அமைச்சர் எந்த தகவலும் அளிக்கவில்லை.

* 9.3 லட்சம் குழந்தைகள் படிப்பை தொடரவில்லை
ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து பேசுகையில், ‘’நாடு முழுவதும் 9 லட்சத்து 30 ஆயிரத்து 531 குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் இருந்து படிப்பை தொடர முடியாமல் இடையில் வெளியேறினர். இவர்களில் 5.02 லட்சம் பேர் மாணவர்கள், 4.27 லட்சம் பேர் மாணவிகள் ஆவர். இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3.96 லட்சம் மாணவர்களும், இதையடுத்து, பீகாரில் 1.34 லட்சம், குஜராத்தில் 1.06 லட்சம் பேரும் படிப்பை இடைநிறுத்தி உள்ளனர்,’’ என்று கூறினார்.

Tags : Parliament , Parliament drops
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...