ஆஸ்கர் விருது தந்த முதுமலை: ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கிடைத்த பெருமை, கொண்டாடும் நீலகிரி மக்கள்

வனத்தில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 யானை குட்டிகளுக்கு தாய் தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கிய பழங்குடி தம்பதிகளின் அனுபவத்தை ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஊட்டி இயக்குநர் கார்த்திகி கன்சால்வ்ஸ்  எடுத்த ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது பெறுவது  இதுவே முதல்முறை. இந்த ஆவணப்படம் முழுவதும் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது. தெப்பக்காட்டில் ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இங்கு 23 யானைகள் உள்ளன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகின்றனர். கடந்த 2017 மே மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடமிருந்து பிரிந்த நிலையில் ஊருக்குள் நுழைந்த 3 மாத ஆண் குட்டி யானையை நாய்கள் கடித்து குதறியதில் வால் பகுதி உட்பட உடல் முழுவதும் காயத்துடன் சுற்றி திரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அது உயிர் பிழைப்பது கஷ்டம் என கூறப்பட்டது. இந்த நிலையில், தெப்பக்காடு முகாமை சேர்ந்த பழங்குடியின பாகன் பொம்மன் தேன்கனிக்கோட்டை சென்று அங்கேயே தங்கி குட்டி யானையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டார். அதன் உடல் நலம் சற்று தேறிய நிலையில்,  முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வந்து ரகு என பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் அங்குள்ள கிராலில் (பிடிபட்ட காட்டு யானைகளை அடைத்து வைக்க பயன்படும் மரக்கூண்டு) காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த பாகன் பொம்மனும், அவரது மனைவி பெள்ளியும் 24 மணி நேரமும் தங்கி அக்கறையுடன் பார்த்து கொண்டனர். இந்த சமயத்தில் 2019 செப்டம்பர் மாதம் சத்தியமங்கலம் பகுதியில் தாயை பிரிந்த நிலையில் பெண் யானை குட்டி தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு பொம்மி (அம்மு) என பெயரிடப்பட்டு, அதை பராமரிக்கும் பணியையும் பொம்மன், பெள்ளியிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இந்த பழங்குடியின தம்பதி ரகுவிற்கும், பொம்மிக்கும் வளர்ப்பு தாய், தந்தையாகவே மாறினர். தற்போது ரகுவிற்கு 7 வயதும், பொம்மிக்கு 4 வயதும் ஆகிறது. கடந்த 7 ஆண்டுகளாக அவற்றை தங்களது பிள்ளைகள்போல வளர்த்த பழங்குடியின தம்பதி பற்றிதான், ஊட்டியை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கன்சால்வ்ஸ் ஆவணப்படமாக எடுத்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக பொம்மன், பெள்ளி ஆகியோருடன் வாழ்ந்து ஆவண படமாக்கி இருக்கிறார். ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ பெயரில் எடுக்கப்பட்ட இந்த ஆவண குறும்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த குறும்படம்தான் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. விருதை ஆவணப்படத்தை இயக்கிய ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்று கொண்டனர். தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்த முதுமலையை சேர்ந்த பழங்குடியின தம்பதியின் அனுபவங்களை பற்றி எடுத்த ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள தகவலை அறிந்து, நீலகிரி மாவட்ட மக்கள் பொம்மன், பெள்ளியையும், இயக்குநர், தயாரிப்பாளரையும் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் மாவட்டத்துக்கு உலக அரங்கில் பெயர் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

ஆவணப்படத்துக்கு விருது கிடைத்திருப்பதை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான மீடியாக்கள் முதுமலையில் முகாமிட்டு பொம்மி யானையை பராமரித்த பெள்ளியிடம் அனுபவங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்காலிக காவடியாக (உதவியாளர்) சில ஆண்டுகள் பொம்மியுடன் பயணித்த பெள்ளி தற்போது யானை குட்டிகளுடன் வாழ்ந்த நினைவுகளுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை பழங்குடியின மக்கள் சந்தித்து என்ன விருது என அவர்களுக்கு சொல்ல தெரியாவிட்டாலும், விருது கிடைச்சிருக்காமே... என கேட்டு வாழ்த்து சொல்லி செல்கிறார்கள்.

குட்டி யானைகளுக்கு வளர்ப்புத்தாயாக வாழ்ந்த அனுபவம் குறித்து பெள்ளி நெகிழ்ச்சியுடன் அளித்த பேட்டி: குட்டி யானை ரகுவை கூட்டிட்டு வரும்போதுதான் முதல் முறையாக யானையை கவனிக்கிற வேலைக்கு போனேன். ஆரம்பத்துல கொஞ்சம் பயம் இருந்தது. அப்புறம் எந்த பயமும் இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி யானைங்க வெறும் யானை கிடையாது. மொத்த பாசத்தோட உருவம். நீங்க பாசம் வைத்து பழகினால், பதிலுக்கு ஆயிரம் மடங்கு பாசத்தை நம் மீது பொழியும். ரகுவையும், பொம்மியையும் பெத்த புள்ளைங்களைவிட ஒருபடி மேல வச்சி பாத்துக்கிட்டோம்.

மடியில படுக்க வெச்சு பாலூட்டியிருக்கிறோம். வயித்துப்போக்கு, வாந்தி எடுத்தாலும் எந்த சங்கடமும் இல்லாமல் கட்டுன சீலையில துடைச்சு சுத்தம் பண்ணுவேன். சுடு தண்ணீர் வைத்துதான் குளிக்க வைப்போம். தாய் இல்லாமல் ஒரு குட்டி யானை இருக்குன்னு தெரிஞ்சா முதல் தகவல் என் கணவர் பொம்மனுக்குதான் வரும். எதைப்பத்தியும் யோசிக்காமல் எந்த நேரமா இருந்தாலும் உடனே கிளம்பி விடுவார். ரகுவை காப்பாத்த நாங்க பட்ட பாட்டை, சொல்லவே முடியாது. அதேபோலதான், குட்டி யானை அம்முவையும் கொண்டு வந்தாங்க. ரொம்ப சின்ன குட்டி. யானைக்கான நிறமே கூடல இளஞ்சிவப்பு நிறத்துலதான் இருந்தது. எப்படிடா காப்பாத்த போறோம்னு  கலங்கிட்டோம்.  

வனத்துறையில் எனக்கு கொடுத்த சம்பள காசுல பால், பழம்ன்னு வாங்கி கொடுத்து காப்பாத்துனோம். ஒரு நொடி விலகி போக முடியாது. கத்தி கதறி ஊரையே கூட்டிரும். வனத்துறையில் எல்லா வசதியும் செஞ்சி கொடுத்தாங்க. எப்படியோ ரெண்டையும் காப்பாற்றி ஆளாக்கிட்டோம். தாய் இல்லாமல் இருக்கிற குட்டிகளை பார்த்தாலே மனசு கஷ்டமா இருக்கும். எங்களின் அனுபவத்தை படமாக எடுத்தனர். இப்போ அதுக்கு விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. இவ்வாறு பெள்ளி கூறினார்.

* எதிர்பார்க்காத வரவேற்பு

பாகன் பொம்மன் கூறுகையில், ‘எனது தாத்தா, அப்பாவை தொடர்ந்து, தற்போது 3வது தலைமுறையாக நான் யானை பாகனாக வனத்துறையில் பணியாற்றி வருகிறேன். எனது மனைவியும், இதே முகாமில் தான் பணியாற்றி வருகிறார். ஏராளமான யானைகளையும், யானை குட்டிகளையும் பராமரித்து, மீண்டும் வனத்தில் விட்டுள்ளோம். தற்போது கூட, வயதான ஒரு யானையை பராமரித்து வருகிறோம். காட்டுநாயக்கர் பழங்குடிகளான நாங்கள், எங்கள் வாழ்வியலையும், யானைகளுடன் இருக்கும் உறவையும் `தி எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்’ ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் பதிவு செய்துள்ளார்.

நானும், எனது மனைவியும் தினசரி முகாமில் நடப்பதையே படமாக்கி உள்ளார். எங்கள் கதைக்கு இத்தனை பெரிய வரவேற்பு கிடைக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது, பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது, தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தாய்களை இழந்து தவிக்கும் 2 குட்டி யானைகளை, யானைக் கூட்டங்களுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

* புலிகள் காப்பக துணை இயக்குநர் பெருமிதம்

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா கூறுகையில், ‘‘குட்டி யானைகளை பராமரித்த பெள்ளி வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் பொம்மன் நிரந்தர பணியாளர். பெள்ளி தற்போது யானை பராமரிப்பில் இல்லை என்றாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் யானைகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு ஒரே யானையை, ஒரே பாகன், உதவியாளர் பராமரிக்க அனுமதியில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்வோம். அதன்படி பொம்மனும் வேறு யானையை பராமரித்து வருகிறார். முதுமலை குட்டி யானைகள் மற்றும் பழங்குடியின தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

* தவிக்கும் குட்டிகள் களத்தில் ஆஸ்கர் பாகன்

அண்மையில் தர்மபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்த யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன. அதன் இரு குட்டிகள் தாயை இழந்து தவித்து வரும் நிலையில், அவைகளை மற்றொரு யானை கூட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்னும் நிலையில், அதுவரை பராமரிக்கும் பணியில் பாகன் பொம்மன் ஈடுபட்டு வருகிறார். தான் ஒரு அங்கமாக இருந்த ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள செய்தி வந்த வேளையிலும், யானைகளை பராமரிக்கும் பணியில் பொம்மன் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: