முகத்தில் ஆசிட் ஊற்றி மருமகளை கொல்ல முயற்சி அதிமுக பெண் நிர்வாகி கைது

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-கடலூர் ரோடு செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன். இவரது மனைவி ஆண்டாள். அதிமுக நகர துணை செயலாளர். இவர்களது மகன் முகேஷ்ராஜிக்கும், கிருத்திகாவுக்கும் 7 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ரிஷிதா (5), ரிஷிகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ்ராஜ் கோவை மாவட்டம் அவிநாசியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது மாமியார் ஆண்டாள் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஆண்டாள் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பினார்.

அப்போது மருமகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் தூங்கி கொண்டிருந்த கிருத்திகா மீது பாத்ரூமிற்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை ஆண்டாள் வீசியுள்ளார். மேலும் கொசு விரட்டி திரவத்தை அவரது வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து கிருத்திகாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிட் வீசியதில் கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து  விருத்தாசலம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து அதிமுக நகர செயலாளரான ஆண்டாளை கைது செய்தனர்.

Related Stories: