×

லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுலுக்கு எதிராக பாஜ கடும் அமளி நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுவதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியதை கண்டித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ அமளியில் ஈடுபட்டது. இதனால் இருஅவைகளும் முடங்கின. நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது.  அடுத்த மாதம் 6ம் தேதி  வரை நடைபெறும் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் போது மைக் அணைக்கப்படுவதாக லண்டனில் புகார் தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ராஜ்நாத் சிங் பேசுகையில்,’ மக்களவை உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டன் சென்று, இந்தியாவை இழிவுபடுத்த முயன்றுள்ளார்.

அவர் அங்கு பேசும் போது,’ இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. மேலும் இந்தியாவின் ஜனநாயகத்தை வெளிநாடுகள் காப்பாற்ற வேண்டும் என்று பேசினார். இந்தியாவின் மரியாதை, கவுரவத்தை இதன் மூலம் அவர்  காயப்படுத்தினார். எனவே சபாநாயகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உறுப்பினர் ராகுல்காந்தி மீது கண்டன நடவடிக்கையை இந்த அவையில் மேற்கொள்ள வேண்டும்.  அவருடைய பேச்சுக்காக இந்த அவையில் மன்னிப்பு கேட்கும்படியும் ராகுலுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று பேசினார். ராஜ்நாத் சிங் பேசும் போது பா.ஜ எம்பிக்கள் எழுந்து ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் மோடி-அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து,’    இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகள் உதவியை நாடியதற்காக நாங்கள் ராகுலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் அவர் செய்ததற்காக வெட்கம் அடைந்தால் இந்த அவைக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் ’ என்றார். சபாநாயகர் ஓம்பிர்லா கூறுகையில்,’  இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக  உள்ளது. எனவே உறுப்பினர்கள் சபையை ஒழுங்காகச் செயல்பட விடுங்கள். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். கோஷம் எழுப்புவது நல்லதல்ல. இந்த நாட்டு மக்கள் நமது ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். வெளிநாட்டு எம்.பி.க்கள், சபாநாயகர்கள் நமது அவைக்கு அடிக்கடி வந்து செல்வது கூட இதை ஏற்றுக்கொள்கிறது’ என்றார்.  

ஆனாலும் அவையில் அமளி குறையாததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடிய போது அமளி நீடித்தது. நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட போதும் அமளி குறையவில்லை. இதையடுத்து அப்போது அவையை நடத்திய ராஜேந்திரஅகர்வால் நாள் முழுவதும் மக்களவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மாநிலங்களவையிலும் இதே விவகாரம் எழுப்பப்பட்டது. அவை தொடங்கியதும் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் இதைப்பற்றி பேசினார்.   இந்திய பத்திரிகைகள், இந்திய நீதித்துறை, இந்திய ஊடகங்கள், தேர்தல் ஆணையம், இந்திய ராணுவம் ஆகியவற்றின் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் (ராகுல் காந்தி) மன்னிப்பு கேட்கும் வரை, நாடு அவரை மன்னிக்காது. அவர் இந்த அவைக்கு வந்து நாட்டு மக்களிடமும், இந்த சபையின் தலைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜனநாயகம் என்றால் என்ன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று ராகுல் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசினார். பியூஷ்கோயல் பேச்சுக்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது,’ மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாதவர், மக்களவையில் உறுப்பினராக இருப்பவர் குறித்து எந்த ஒரு உறுப்பினரும் பிரச்னை எழுப்ப முடியாது. ஒரு சபையின் உறுப்பினர், மற்ற சபை உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை  கூறுவதற்கு அவையின்  பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தக்கூடாது. எனவே,கோயல் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து அகற்ற வேண்டும் ’ என்றார். அதற்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில்,’ இதுபற்றி நான் விசாரித்து முடிவு எடுப்பேன்’ என்றார்.  

அப்போது  காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங், ‘நான் உறுப்பினராக இருந்த 45 ஆண்டுகளில், ஆளும் கட்சி சபையை நடத்த அனுமதிக்காதது இதுவே முதல் முறை. அவை இயங்குவதை உறுதி செய்வது ஆளும் கட்சியின் பொறுப்பு’ என்று வலியுறுத்தினார். அப்போது அவைத்தலைவர் தன்கர்,’ அவர் தான் யாருடைய பெயரையும் கூறவில்லை என்கிறாரே’ என்றார். இதனால் இருதரப்பிலும் கடும் அமளி ஏற்பட்டது. எனவே கோயல் பேச்சை நீக்குவது குறித்து இன்று அறிவிப்பதாக தன்கர் தெரிவித்தார். அப்போது கோயல்,’ லண்டனில் பேசிய குப்பை பேச்சுக்கு ராகுல் காந்தி சபைக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

இதற்கு,’ மாநிலங்களவையில்  எம்பி இல்லாத ஒரு தலைவரை எப்படி அவைக்கு அழைக்க முடியும்’ என்று கேட்டு பிரதமர்  மோடி வெளிநாட்டில் பேசிய பேச்சை எடுத்துக்கூறியதால் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் பிரச்னையால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முதல்நாளில் முடங்கியது.

* 16 எதிர்க்கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் நேற்று காலை எதிர்க்கட்சி  எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, ஐக்கிய ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் தாக்ரே), மதிமுக, ஆர்எஸ்பி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம்ஆத்மி உள்பட 16  கட்சிகளின்  தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை  தவறாக  பயன்படுத்துவது, அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்  தொடர்பாக  நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பது, சீன எல்லை பிரச்னை, விலைவாசி  உயர்வு,  வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிஆர்எஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட  கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற  வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.  மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக  எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்பிக்கள்  சார்பில் ஒத்திவைப்பு தீர்மான  நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

Tags : Parliament ,BJP ,Rahul ,London , Parliament stalled as BJP lashed out at Rahul demanding apology for London speech
× RELATED கடந்த 10 ஆண்டுகளாக ஏன் முயற்சி...