பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. அவற்றில், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இங்குள்ள பிரதான சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏற்கனவே இப்பகுதிகளில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக குறுகி உள்ளதால், பகல் நேரத்தில் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, இங்குள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இப்பகுதி பொதுமக்கள் சார்பில் தமிழக அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து தமிழக அரசும் பரிசீலித்து வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலைகளில் சமீப காலமாக மாடுகள் அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. அவற்றை அதன் உரிமையாளர்கள் முறையாக கட்டிப்போட்டு வளர்க்காமல், இவ்வாறு கண்டபடி அவிழ்த்து விடுவதால், அவை இரவில் ஆங்காங்கே சாலைகளிலேயே படுத்து உறங்குகின்றன. அது தெரியாமல், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இந்த மாடுகளின் மீது மோதி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால், சென்னை சாலைகளில் மாடுகள் திரிவது வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் இந்த விவகாரத்தில் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு, சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் இதற்கு சற்று விதிவிலக்காக, விபத்து ஏற்படக் காரணமாக இருக்கும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது.
எனவே, பெருகி வரும் வாகன விபத்துக்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில், இனி வரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரியாமல் இருக்க, அதன் உரிமையாளர்கள் மீது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.