மெட்ரோ ரயில் பணிக்காக முருகன் கோயில் இடிப்பு: போலீசார் குவிப்பு

பெரம்பூர்: பெரம்பூரில் மெட்ரோ ரயில் பணிக்காக முருகன் கோயில் இடிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆயிரம் அடி சதுரம் கொண்ட காலி இடத்தில் கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியைச் சேர்ந்த இருசம்மாள் (75) என்பவர் கடந்த 50 வருடங்களாக ஸ்ரீவள்ளி பாலசுப்பிரமணியர், தெய்வானை கோயிலை கட்டி நிர்வகித்து வந்தார்.

மேற்கண்ட இடத்தை சென்னை மெட்ரோ நிர்வாகத்தினர், மெட்ரோ ரயில் பணிக்காக தேர்வு செய்து, அந்த இடம் வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் தி.ரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகள், மேற்கண்ட கோயிலை அங்கிருந்து அகற்றிவிட்டு, இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு இருசம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் இதுவரை கோயில் நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திரு.வி.க. நகர் 6வது மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை இடித்து அகற்றினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். அதிகாலை 5 மணிக்கு துவங்கப்பட்ட பணி காலை 11 மணியளவில் முடிவடைந்தது. கோயில் முழுவதையும் இடித்த அதிகாரிகள், அந்த இடத்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அந்த பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் வர இருப்பதால் குறிப்பிட்ட அந்த இடம் மெட்ரோ ரயில் பணிக்காக ஒப்படைக்கப்பட உள்ளது. முன்னதாக கோயிலில் இருந்த சிலைகளை கோயில் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: