சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது. கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவராக எர்ணாவூர் நாராயணனை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவராக நிப்பான் தனுஷ்கோடி, இளைஞரணி செயலாளராக பிரபு, மாணவரணி செயலாளராக கார்த்திக் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய தமிழகத்தின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன்ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நீதி கட்சி தலைவர்களில் ஒருவரான டபிள்யு.பி.ஏ சௌந்தரபாண்டியனார் பிறந்த நாளை அரசு விழாவாக ஏற்று தமிழக முதல்வர் நடத்த வேண்டும். வருகின்ற 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற கட்சியினர் பணியாற்ற வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.