×

சட்டப்படி செல்லுபடியாகும் சீர்திருத்த திருமண தீர்மானத்தை நிறைவேற்றியவர் அண்ணா: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும்; திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி தந்தவர் அண்ணா. பிறந்த குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள் என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வரின் சிறப்பு நேர்முக உதவியாளர் சி.மணிவண்ணனின் மகள் லக்சயா-கவுதம் ஆகியோரது திருமணம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் தொடர்ந்து இதுபோன்ற சீர்திருத்த, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணத்தில் பங்கேற்கிறேன். சீர்திருத்த திருமணங்கள் 1967க்கு முன்பு நடைபெறுமென்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறாத சூழ்நிலையில் தான் நடைபெற்றது. ஆனால், 1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அண்ணா தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. அவர் முதல்வராக பொறுப்பேற்றார்.

முதன் முதலாக முதல்வராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, சட்டமன்றத்தில் 3 தீர்மானங்களை கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்றி தந்தார். அந்த மூன்றில் ஒன்று தான் சீர்திருத்தத் திருமணங்கள். ஏற்கனவே நடந்திருந்தாலும் இனி நடக்க இருக்கக்கூடிய திருமணங்களாக இருந்தாலும், அந்த சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி தந்தார். அடுத்த தீர்மானமாக இருமொழி கொள்கையை சட்டமாக்கி தந்தார். அதற்கடுத்து இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு என்று நாம் கம்பீரமாக சொல்லி கொண்டிருக்கிறோமே இந்த தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

எதற்காக இதை சொல்லுகிறேன் என்று சொன்னால், இன்றைக்கு நடைபெற்றிருக்க கூடிய இந்த சீர்திருத்த திருமணம் என்பது சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்க கூடிய திருமணம். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இது ஒரு தமிழ் திருமணம். இந்த தமிழை தான் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்று தந்தார்கள். அப்படிப்பட்ட அழகு தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்தேறி இருக்கிறது. இப்போதெல்லாம் சீர்திருத்த திருமணம் நடக்கிறது என்றால், யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை, முன்பெல்லாம் நடக்கிறபோது ஆச்சரியப்பட்டோம்.

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் இந்த திருமணங்கள் நடக்க தொடங்கி இருக்கிறது. நேற்றைக்கு கூட மாலையில் கேரள மாநில தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அவர் என்னை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். நீதிபதி அழைத்து செல்கிறபோது, என்னிடம் பெருமையாக சொன்னார், இன்று இந்த திருமணத்தை நாங்கள் நடத்தி வைத்தோம். வரவேற்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த திருமணமும் தமிழ் முறைப்படி, சீர்திருத்த முறையில் தான் நாங்கள் நடத்தி வைத்தோம்.

கேரள மாநிலத்தினுடைய முதல்வர் நேரில் வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று பெருமையாக சொன்னார். இப்படி பரவலாக எங்கு பார்த்தாலும் எல்லோராலும் ஏற்று கொள்ளக்கூடிய சுயமரியாதை, சீர்திருத்த திருமணங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். அதே நேரத்தில் இது தமிழ் திருமணமாக நடக்கிற காரணத்தால் நம்முடைய மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Anna ,Chief Minister ,M. K. Stalin , Anna passed a legally valid reformed marriage resolution: Children should be given Tamil names; Chief Minister M. K. Stalin's speech at the wedding ceremony
× RELATED உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!